தமிழர்களுக்கு இந்தியா உதவும் : நிருபமா உறுதி


கொழும்பு : "இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, அனைத்து வகையிலான உதவிகளையும் இந்தியா வழங்கும்' என, இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் உறுதி அளித்துள்ளார்.



இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் அகதிகளாகியுள்ள தமிழர்கள், அங்குள்ள பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், படிப்படியாக அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்தியா அளித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இதுதவிர, விவசாயப் பணிகளுக்கான உதவிகள், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாகவும் இந்தியா உறுதி அளித்துள்ளது.இந்த மறு வாழ்வுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். நேற்று வவுனியாவுக்கு சென்ற நிருபமா, அங்குள்ள முகாமில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



அப்போது அவர், "இலங்கைத் தமிழர்களுக்காக, முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளது' என, உறுதி அளித்தார். பின்னர், வவுனியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும், நிருபமா ராவ் ஆலோசனை நடத்தினார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.



இன்று, முல்லைத் தீவு, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்கு நடக்கும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இதன்பின், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments